திங்கள், 30 ஜூன், 2008

தமிழ் நெறி அறிமுகம்



தமிழனின் மதம் யாது ? அவனுக்கென்று ஒரு மதம் உண்டா ?

100 ஆண்டு கட்டிடங்கள் எல்லாம் வரலாற்று சின்னங்கள் ஆன இன்றைய உலகில்,ஆயிரம் ஆண்டுகள் பழமையான மதுரை மண்டபத்திற்கு நம்மூரில் பெயர் 'புதுமண்டபம்'.
பிற தேசங்களில் மனித இனம் காட்டில் வேட்டையாடி விலங்காய் வாழ்ந்த காலத்திலேயே கல்லணையும் கப்பலும் கட்டினோம்.அலக்சாண்டர் முதல் அவுரங்கசிப் வரை படையெடுத்து இந்தியக் கோயில்களை புடைத்தெடுத்த காலத்தில், வான்முட்ட கற்கோயில்கள் கட்டினோம்.
இன்றுள்ள பல மொழிகளின் எழுத்து வடிவம் பிறப்பதற்கு முன்பே, அல்லது மொழிகளே பிறப்பதற்கு முன்பே இலக்கணமும், இலக்கியமும் படைத்தோம்.

இவ்வளவும் செய்த நாம் மதம் மட்டுமா இறக்குமதி செய்தோம் ? மற்றவை போல மதத்திலும் (சமணம், பெளத்தம், சைவம், வைணவம் என) வந்தாரை வாழவைத்தோம் ..!!

தெய்வம் ஒன்றே என்றும், அது அன்பே என்றும், அந்த தெய்வத்தை அன்பாய் தொழுவது எவ்வாறு என்றும் உலகிற்கே ஒளி தரும் வண்ணம் ஒரு அறிய மதம் தமிழனிடம் இருந்தது. அந்த மதநெறியைப் பற்றியே எனது சிறிய தேடல் இந்த தொடர்.

இந்த மதத்திற்கும் ஒரு வேத நூல் உண்டு. அது தெய்வம் தந்த திருக்குறள்.

கல்வி, மருத்துவம், காதல், அரசியல், சுயமுன்னேற்றம், மேலான்மை, தன்னம்பிக்கை என எல்லாவற்றையும் கண்ட குறளே தமிழனின் வேதநூல். கடவுள் மதம் பற்றி வள்ளுவனின் பார்வையிலிருந்து இந்த பயணத்தை தொடங்குவோம்.